தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வீடு வீடாகச் சென்று வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசோக் ஆனந்த், பாரி நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று ‘ஜக்’ சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதே பகுதியில் அவரது தந்தையும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருமான ஆனந்தன் பொதுமக்களை நேரில் சந்தித்து தனது மகனுக்கு ஆதரவாக வாக்குக் கோரினார்.
அதேபோல், காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் விநாயகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று ‘கை’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும், திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர். இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் களம் மிகுந்த பரபரப்பை எட்டியுள்ளது.

