யூனியன் பிரதேசங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது கவுன்சில் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கலாம்: விதிகள் திருத்தம்!
புதுச்சேரி: சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் காலகட்டங்களில், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் (Inter-State Council) கூட்டங்களில் அந்தந்தப் பகுதிகளின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்க அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருத்தம் செய்துள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நல்லுறவு, பொதுவான கொள்கை முடிவுகள் மற்றும் மாநில நலன்கள் குறித்து விவாதிக்க மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இக்கூட்டங்களில் மாநில முதல்வர்கள் மற்றும் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மட்டுமே பங்கேற்று தங்கள் பகுதியின் குரலை பதிவு செய்வர். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்தத்தின்படி, மேற்கண்ட யூனியன் பிரதேசங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத சூழலிலும் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி நிலவும்போதும் துணைநிலை ஆளுநர்கள் கவுன்சில் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்க முடியும்.
இந்த நடவடிக்கையின் மூலம், அரசியல் அல்லது நிர்வாக மாற்றங்கள் காரணமாக மக்களாட்சி இல்லாத காலத்திலும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் கோரிக்கைகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்கள் தேசிய அளவில் கவுன்சில் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


