புதுச்சேரி ராக் கடற்கரையில் பிரம்மாண்ட தூய்மைப் பணி: ஆளுநர் கைலாஷ்நாதன், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!

புதுச்சேரி: சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி ராக் கடற்கரையில் (Rock Beach) இந்திய கடலோரக் காவல் படை மற்றும் என்.சி.சி. சார்பில் பிரம்மாண்ட கடற்கரை தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் மற்றும் தலைமைச் செயலர் டாக்டர் சரத் சவுகான் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டனர்.
கடல் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில், புதுச்சேரி என்.சி.சி குரூப் தலைமையகத்தைச் சேர்ந்த 54 என்.சி.சி மாணவர்கள், 2 அதிகாரிகள் மற்றும் 4 பயிற்றுநர்கள் தீவிரமாகப் பங்கேற்றனர். இவர்களுடன் 101 கடலோரக் காவல் படை வீரர்கள் மற்றும் 505-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், பொதுமக்கள் ஒன்றிணைந்து கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்றினர்.
‘தூய்மையான கடல்’ (Swachh Sagar) திட்டத்தின் கீழ் வருங்கால சந்ததிக்கான நிலையான இயற்கை சூழலை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இக்கூட்டு முயற்சி, கடற்கரையைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டிய அவசியத்தை பொதுமக்கள் மத்தியில் உணர்த்தியது.

