நெட்டப்பாக்கம் கம்பன் அரசு பள்ளியில் ‘தாய்மார்கள் மேளா’ விழிப்புணர்வு முகாம்: வளரிளம் நலம், புகையிலை தீமைகள் குறித்து விளக்கம்!

புதுச்சேரி, செப். 15:
புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் ஆரம்ப சுகாதார நிலையம் (AAM PHC) மற்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் (NTCP) சார்பில், அங்குள்ள கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘தாய்மார்கள் மேளா’ (Mothers Mela) சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வளரிளம் பருவத்தினரின் உடல் நலம், தன்சுத்தம், சரிவிகித ஊட்டச்சத்து மற்றும் வாய் சுகாதாரம் பேணுதல் குறித்து மருத்துவ வல்லுநர்களால் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் கொடிய பாதிப்புகள் மற்றும் மாணவப் பருவத்தில் எதிர்கொள்ளும் மன அழுத்த மேலாண்மை (Stress Management) குறித்து விழிப்புணர்வு உரையாற்றப்பட்டது.
இச்சிறப்பு முகாமில் 40 பெற்றோர்கள், 60 மாணவ-மாணவிகள், 6 ஆசிரியர்கள் மற்றும் 2 பள்ளி ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இத்தகைய விழிப்புணர்வு மிகவும் அவசியம் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.


