சித்தனி தியாகிகள் நினைவுத்தூணில் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி: குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கல்

விழுப்புரம்: வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் சாலைமறியல் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளின் 39-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் சித்தனியில் அமைந்துள்ள தியாகிகள் நினைவுத்தூணில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
கடந்த 1987-ஆம் ஆண்டு வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி தாக்குதலில் 21 பேர் வீரமரணமடைந்தனர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் சித்தனியில் உள்ள நினைவுத்தூணில் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த 39-வது ஆண்டு நினைவு தின நிகழ்வில், தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அன்புமணி ராமதாஸ், இன்னுயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


