பிரதமர் மோடி பிறந்தநாள்: திருவான்மியூரில் முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் சமபந்தி விருந்து!

சென்னை, செப். 17:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பாஜக சார்பில் ‘சேவை தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை திருவான்மியூர் கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ள ‘காக்கும் கரங்கள்’ முதியோர் இல்லத்தில் பாஜக சார்பில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 500-க்கும் மேற்பட்டோருக்கு காலை சிற்றுண்டியும், அத்தியாவசிய உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் பொதுமக்களின் நலனுக்காக இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சேவை தினத்தின் முக்கிய நிகழ்வாக, தூய்மைப் பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து தலைவர்கள் சமபந்தி விருந்தில் பங்கேற்று உணவருந்தினர். இந்நிகழ்வில் பாஜக மாநில மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், நயினார் நாகேந்திரன், முன்னாள் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலத் துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


