தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் விநாயகத்தை தடுக்க சதி: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் நேரு பகீர் குற்றச்சாட்டு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஜி. நேரு (குப்புசாமி) அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நேரு, “தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம் போட்டியிட முழு தயார் நிலையில் உள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் முதலமைச்சர் என். ரங்கசாமியை எதிர்த்து தீவிரமாக களமிறங்கி விநாயகம் இரண்டாம் இடம் பிடித்தார். தற்போது விநாயகம் மீண்டும் போட்டியிட்டால் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதை உணர்ந்து, அவரை போட்டியிட விடாமல் தடுக்க சில அரசியல் கட்சிகள் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன” என்று குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “திமுக சார்பில் சேதுசெல்வத்தை வேட்பாளராக களமிறக்கி வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு சதி செய்யப்படுகிறது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் களமிறங்க ஆதரவு கோருவது எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் சதியே அன்றி வேறில்லை. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி சார்பில் எங்கள் வேட்பாளரை களம் காண வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதுகுறித்து பின்னர் பரிசீலித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளோம்” என்றார்.
இறுதியாக, தற்போதைய அரசியல் சூழலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் ஆகியோர் எடுக்கும் அரசியல் முடிவுகளைப் பொறுத்தே எங்களது அடுத்தகட்ட தேர்தல் வியூகம் அமையும் என்றும், தவெக தலைமையின் ஆலோசனையின்படியே எங்களது செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
