காவல் நிலையத்துக்கு 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் இருந்தும் மக்களுடன் தொடர்பு இல்லை: நேரு எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

புதுச்சேரி, செப். 3:
புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து, உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் சீனியர் காவல் கண்காணிப்பாளர் (SSP) கலைவாணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது கொல்லப்பட்ட ஆனந்தின் மனைவி சரோஜினி, “ஆள் மாறாட்டத்தில் இந்தக் கொலை நடக்கவில்லை; திட்டமிட்டுதான் எனது கணவரைக் கொலை செய்துள்ளனர்” என்று அதிகாரியிடம் முறையிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நேரு எம்.எல்.ஏ., “மதுபானக் கூடத்தில் ஏற்கனவே கோஷ்டி மோதல் நடந்தபோதும் போலீசார் அவர்களை முறையாகக் கண்காணிக்காமல் விட்டுவிட்டனர். எல்லைப் பிரச்னையைப் பார்க்காமல் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தால் இந்த கொலையைத் தடுத்திருக்கலாம். கோவிந்தசாலை குடியிருப்பு பகுதியில் உடனடியாகப் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
தற்போது குற்றவாளிகளுக்கும் ரவுடிகளுக்கும் காவல்துறையினர் மீது பயம் இல்லாமல் போய்விட்டது. முன்பு ஒரு காவல் நிலையத்துக்கு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ. மட்டுமே இருந்தனர்; அவர்கள் எப்போதும் பொதுமக்களுடன் தொடர்பில் இருந்தனர். ஆனால் தற்போது ஒரு காவல் நிலையத்துக்கு ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் இருந்தும் மக்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களது தொலைபேசி எண்கள்கூட மக்களுக்குத் தெரிவதில்லை. போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு குற்றங்களைத் தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

