மீனவர் உள்ஒதுக்கீட்டை 7.5 சதவீதமாக உயர்த்த வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கிடம் அன்பழகன் மனு!

புதுச்சேரி, 01/09/2026: புதுச்சேரியில் உள்ள மீனவர் மக்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, அவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை 2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய மீன்வளத்துறை அமைச்சரிடம் புதுச்சேரி தற்காலிக சபாநாயகர் அன்பழகன் நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களை, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் நேரில் சந்தித்து மீனவர்களின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பித்தார்.
அந்த மனுவில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் கணிசமான அளவில் வசித்து வரும் மீனவ சமுதாய மக்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் பெற தற்போதைய 2 சதவீத உள்ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனவும், மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இதனை 7.5 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களின் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

