கேரள அரசின் போதைப்பொருள் தடுப்பு தூதராக நடிகர் பிரசாந்த் நியமனம்: ‘ஆபரேஷன் டூஃபான்’ திட்டம் தொடக்கம்!

திருவனந்தபுரம்: கேரள அரசின் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ தூதராக (Ambassador) பிரபல திரைப்பட நடிகர் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பைப்பாடு பகுதியில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய படகுப் போட்டியைத் தொடங்கி வைக்க நடிகர் பிரசாந்திற்கு அம்மாநில அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், படகுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழாவின் போது, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, மாநிலத்தின் போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு தூதராக நடிகர் பிரசாந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான கௌரவச் சின்னத்தை (பேட்ஜ்) அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
மாநிலம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், கடத்தல் வலைப்பின்னலை முற்றிலும் வேரறுக்கவும் கேரள அரசும் காவல்துறையும் இணைந்து ‘ஆபரேஷன் டூஃபான்’ (Operation Toofan) என்ற அதிரடி முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளன. உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் இயங்கும் இத்திட்டத்தின் தூதராக நடிகர் பிரசாந்த் இனி விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுக்க உள்ளார்.



