ஏம்பலம் தொகுதியில் போதிய பேருந்து வசதி இல்லை: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மோகன்தாஸ் ஆதங்கம்!
புதுச்சேரி: ஏம்பலம் தொகுதியில் போதுமான அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் குறித்த நேரத்திற்கு பணிக்குச் செல்ல முடியாமலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாமலும் தினசரி கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் கிராமப்புற மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, புதுச்சேரி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஏம்பலம் தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேவையான வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும், ஏற்கனவே நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவையை உடனடியாக மீண்டும் தொடங்கவும் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

