புதுச்சேரி வேர்ல்பூல் தொழிற்சாலை விவகாரம்: ஹெச்ஆர் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
புதுச்சேரி, ஆக. 24: புதுச்சேரி திருபுவனையில் இயங்கி வரும் வேர்ல்பூல் தனியார் தொழிற்சாலை விவகாரத்தில், தவெக எம்எல்ஏ சாய் ஜெ சரவணன்குமார் அளித்த புகாரின் பேரில், அந்நிறுவனத்தின் ஹெச்ஆர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது பிசிஆர் செல் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 21-ம் தேதி ஆய்வுக்காக தொழிற்சாலைக்குள் செல்ல முயன்ற எம்எல்ஏவை ஊழியர்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இருதரப்பிலும் மாறி மாறி புகார்கள் அளிக்கப்பட்டன.
தனது புகாரில், எம்எல்ஏ சாய் ஜெ சரவணன்குமார், தொழிற்சாலை நிர்வாகத்தினர் தன்னை பட்டியலினத்தவர் என சாதி ரீதியாக இழிவுபடுத்தி, உள்ளே வரக்கூடாது என தடுத்து நிறுத்தியதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இப்புகாரை ஏற்றுக்கொண்ட பிசிஆர் செல் காவல் நிலையத்தினர், தொழிற்சாலை ஹெச்ஆர் மேலாளர்கள் அருண்குமார், சிவசங்கர், மற்றும் காவலாளிகள் உள்ளிட்ட 30 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திருபுவனை போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே தொழிற்சாலை விவகாரத்தில் இருதரப்பிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

