உப்பளம் அம்பேத்கர் சாலை போக்குவரத்து நெரிசல்: தீர்வுக்கு சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

உப்பளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலையில் தொடர்ந்து நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அ. அன்பழகன் முன்னிலையில் நடத்தினார்.
ரோடியர்பேட் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், அம்பேத்கர் சாலையில் உடனடியாக மாற்றுப் பாதை அமைத்து வாகன நெரிசலைக் குறைக்கும் திட்டம் தீர்மானிக்கப்பட்டது.
துறைமுக மைதானத்தில் பெரிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் ஏற்படும் கூடுதல் நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்துக் காவல்துறை மூலம் தனித் திட்டம் கொண்டு சிறப்பு வழிமுறைகள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
தொகுதியில் உள்ள முக்கிய தனியார் பள்ளிகளின் வாகன நிறுத்த வசதியை ஒழுங்குபடுத்தி, பள்ளி தொடக்கம்-முடிவு நேரங்களில் சாலைகளில் வாகனத் தேக்கம் ஏற்படுவதைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடப்பட்டது.
அம்பேத்கர் சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவது ஆகியவை உடனடியாக அகற்றப்பட்டு, பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்பாகவும் சீராகவும் செல்ல போதிய இடம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் பேசிய எம்.எல்.ஏ. அ. அன்பழகன், “அம்பேத்கர் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் பயணம் செய்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாகவும் காலதாமதம் இல்லாமலும் செல்வதற்காக இந்த நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். மக்களின் சிரமத்தைக் குறைப்பதற்காகத் தொடர்ந்து கண்காணித்து தேவையான மாற்றங்களைச் செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.