புதுச்சேரியில் 39-வது தேசிய அண்டர்-13 சதுரங்க சாம்பியன்ஷிப்: முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சதுரங்க சங்கத்தின் சார்பில், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு ஆதரவுடன் 39-வது தேசிய அண்டர்-13 ஓபன் மற்றும் பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி வானரப்பேட்டையில் உள்ள அமலோர்பவம் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெறுகிறது.
இத்தொடரின் தொடக்க விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார். மேலும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. ஏ. நமச்சிவாயம், தற்காலிக சபாநாயகரும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஏ. அன்பழகன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டுப் பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள நிலையில், இந்த தேசியப் போட்டி மாணவர்களின் விளையாட்டுத் திறன் மற்றும் அறிவுக்கூர்மையை ஊக்குவிக்கும் மிகச் சிறந்த தளமாக அமையும் என சட்டமன்ற உறுப்பினர் ஏ. அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும், இத்தொடரைச் சிறப்பாக ஏற்பாடு செய்த மாநில சதுரங்க சங்கத்திற்கும் அமலோர்பவம் பள்ளி நிர்வாகத்திற்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.


