தமிழ்நாடு

விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்

சென்னை:

விபத்தில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 கோடிக்கான நிவாரணக் காசோலையை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் Dr.மகேஷ் குமார் அகர்வால், IPS முறைப்படி வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக (SSI) பணியாற்றி வந்தவர் முத்துக்குமார். இவர் கடந்த ஜூலை மாதம் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது அகால மரணம் காவல்துறை வட்டாரத்திலும் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், பணியின் போது உயிரிழந்த முத்துக்குமாரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், பாரத ஸ்டேட் வங்கியின் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி விபத்து நிவாரணத் தொகை அனுமதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அத்தொகைக்கான காசோலையை உயிரிழந்த அதிகாரியின் மனைவி பாப்பா என்கிற செல்வி அவர்களின் பெயரில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்துறைத் தலைவர் Dr.மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் நேரில் நிவாரணக் காசோலையை மறைந்த அதிகாரியின் மனைவியிடம் வழங்கி, குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

காவல்துறையினரின் நலன் காக்கும் இந்த உடனடி நிவாரண உதவி, பணியில் இருக்கும் காவலர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன