புதுச்சேரியில் பைக் திருட வந்த மர்ம நபர்: நாய் குரைத்ததால் தப்பியோட்டம் – சிசிடிவி காட்சிகள் வைரல்

புதுச்சேரி, செப். 3:
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருட முயன்ற மர்ம நபர், நாய் குரைத்ததால் அச்சமடைந்து தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் முகம் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காக உடல் மற்றும் முகம் முழுவதையும் போர்வையால் போர்த்தியபடி வந்துள்ளார். தொடர்ந்து அவர் வாசலில் நின்ற பைக்கை திருட தீவிர முயற்சி செய்தார்.
அப்போது, தெருவில் இருந்த நாய் ஒன்று போர்வையுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய அந்த மர்ம நபரைப் பார்த்து தொடர்ந்து ஆக்ரோஷமாகக் குரைக்கத் தொடங்கியது. நாயின் தொடர் குரைப்பால் வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் விழித்துக் கொண்டு தங்களைப் பிடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், அந்த மர்ம நபர் பைக்கை எடுக்காமல் அங்கிருந்து தலைதெறிக்க தப்பியோடினார்.
நாய் சரியான நேரத்தில் குரைத்து எச்சரித்ததால் பைக் திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி புதுச்சேரி மக்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

