புதுச்சேரியில் அரசுத் திட்டங்களில் முறைகேடு, நிதி விரயம்: சிஏஜி அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு!
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களைச் சரியான திட்டமிடல் இன்றிச் செயல்படுத்தியதால் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தணிக்கை மற்றும் கணக்காய்வாளர் (சி.ஏ.ஜி) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையின் முக்கியத் தகவல்களைத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மைத் தணிக்கை அதிகாரி ஆர். திருப்பதி வெங்கடசாமி செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அறிக்கையின்படி, இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ₹13.46 கோடி செலவில் நிலம் கையகப்படுத்தப்பட்டும், முறையான அணுகுசாலை இல்லாததால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் பயன்பாடின்றி முடங்கியுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ₹4.46 கோடியில் தொடங்கப்பட்ட பன்நோக்கு அரங்கம், நிதி ஒதுக்கீடு இன்மையால் 4.5 ஆண்டுகளாகக் கட்டுமானப் பணி பாதியில் நிற்கிறது. ஒதுக்குப்புறமான இடத்தில் ₹1.98 கோடி செலவில் கட்டப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவிகள் விடுதி, திறக்கப்பட்ட நாள் முதல் பயனாளிகள் இன்றி வீணாகிக் கிடக்கிறது.
இதுமட்டுமின்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) மற்றும் ஜல் ஜீவன் மிஷன் போன்ற அடித்தட்டு மக்களுக்கான முக்கியத் திட்டங்களிலும் பல்வேறு நிர்வாகக் குளறுபடிகளும் குறைபாடுகளும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இல்லாததால் அரசு நிதி விரயமாவது குறித்து சி.ஏ.ஜி தனது அறிக்கையில் தீவிர கவலையைப் பதிவு செய்துள்ளது.


