காரைக்கால் பி.எட் கல்லூரியில் டி.எல்.எட் படிப்பு மீண்டும் தொடக்கம்: எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் கோரிக்கையை ஏற்று அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு!
காரைக்கால்: காரைக்காலில் உள்ள அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் டி.எல்.எட் (D.El.Ed / D.T.Ed) ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்ட விவகாரத்தில், புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் அளித்த புகாரை ஏற்று மாணவர் சேர்க்கையை மீண்டும் தொடர உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் பி.எட் கல்லூரியில் செயல்பட்டு வந்த டி.எல்.எட் படிப்பிற்கான சேர்க்கை நடப்பாண்டு திடீரென நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இத்தகவலை அறிந்த புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.எம்.எச். நாஜிம், கல்வித் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயத்திடம் உடனடியாக நேரில் முறையிட்டு மாணவர் சேர்க்கையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் நாஜிமின் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்த உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், காரைக்கால் கல்வியியல் கல்லூரியில் இந்த ஆண்டும் வழக்கம் போல் டி.எல்.எட் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து நடத்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ ஆணையும் உடனடியாகப் பிறப்பிக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு விரைந்து உத்தரவு பிறப்பித்த உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
