மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமானார் – எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை, ஆக. 24: பழம்பெரும் திரைப்பட நடிகை சௌகார் ஜானகி காலமானார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரோடு இணைந்து ‘ஒளி விளக்கு’ திரைப்படத்தில் அவர் நடித்தது என்றும் நினைவுகூரத்தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 400 திரைப்படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய சௌகார் ஜானகியின் மறைவு, ஒட்டுமொத்த திரையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

