தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க அரசு முனைப்பு காட்ட வேண்டும்: சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்
சென்னை, ஆக. 20: லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் அவர் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றி மற்றும் கூட்டணி அமைத்த விவகாரம் குறித்துப் பேசிய அவர், இவ்வளவு தூரம் அரசியல் ரீதியாக வளர்ந்து அமைச்சரவையை உருவாக்கியிருப்பது மிகப்பெரிய சாதனை என வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தேவைகளை அரசு முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அண்டை மாநிலங்கள் தற்போது அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகின்றன. அதே போன்றதொரு சாதகமான சூழலைத் தமிழகத்திலும் உருவாக்கினால், இளைஞர்களுக்குப் பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அவர் குறிப்பிட்டார். முதலீட்டாளர்களைக் கவர்ந்து மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.


