புதுச்சேரி

ஏஐ மூலம் மாணவர்களே தீர்வு காணும் ‘வாழும் ஆய்வகமாக’ புதுவையை மாற்ற முடியும்: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு

புதுச்சேரி, செப். 3:
புதுச்சேரி ஆனந்தா இன் ஹோட்டலில் 72-வது ‘பிரிட்ஜ் 26’ (Bridge ’26) மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வகுப்பறைகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என அனைத்துத் துறைகளிலும் நுழைந்துவிட்டது. ஏஐ அனைத்து தகவல்களையும் வினாடிகளில் தந்துவிடும் ஆற்றல் கொண்டது. எனவே எதிர்காலக் கல்வி என்பது தகவல்களை வெறும் மனப்பாடம் செய்வதாக இருக்கக் கூடாது; மாறாக எப்படி சிந்திப்பது, உருவாக்குவது மற்றும் சமூகப் பொறுப்புடன் செயல்படுவது என்பதை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதாக அமைய வேண்டும். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் ஆசிரியர்களுக்கு ஈடாகாது; எந்திரங்கள் தகவலைத் தரும், ஆனால் ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களின் தனித்திறமையையும் கனவுகளையும் அடையாளம் கண்டு வழிகாட்ட முடியும்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “தொழில் நிறுவனங்கள் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் வெறும் ஆட்சேர்ப்பு மையங்களாகப் பார்க்காமல், பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் இணைந்து செயலாற்ற வேண்டும். புதுச்சேரியில் உயர்தர பல்கலைக்கழகங்கள், மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் நிறைந்துள்ளன. இந்தச் சிறந்த கல்விச் சூழலைப் பயன்படுத்தி பொது சுகாதாரம், கழிவு மேலாண்மை, சுற்றுலா, போக்குவரத்து மற்றும் மீன்வளம் போன்ற சவால்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாணவர்களே நேரடியாகத் தீர்வு காணும் ‘வாழும் ஆய்வகமாக’ (Living Lab) புதுச்சேரியை மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

நிகழ்வில் மேட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் செயல் இயக்குநர் விஜயகுமார், ஐசிடி அகாடமி தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீகாந்த், தக்சசீலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன் உள்ளிட்ட கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் துறைத் தலைவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன